50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடியின இருளர் குடியிருப்புக்கு மின்சார வசதி

சிதம்பரம் அருகே சி.மானம்பாடி கிராமத்தில் வாய்க்கால் கரை ஓரமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின இருளர் இன மக்கள் ஓலைக் குடிசையில் குடியிருந்து வந்தனர். அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஒன்றையடிப் பாதையில்தான் நடந்து செல்ல வேண்டும். கல்வி அறிவு இல்லாமல் மீன்பிடித்தல், நத்தை பிடித்தல், நண்டு பிடித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
கடந்த 3 மாதங்கள்க்கு முன்பு இப்பகுதி வந்த சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் குழந்தைகளைப் பள்ளிக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.
இவர்கள் வாழும் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லை என்பதை அறிந்த சார் ஆட்சியர், இது குறித்து சிதம்பரம் மின்துறை அதிகாரிகளிடம் பேசினார். இதையடுத்து அந்தப் பகுதிக்கு 8-க்கும் மேற்பட்ட புதிய மின் கம்பங்கள் குறுகிய காலத்தில் நடப்பட்டு அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவ.12) பழங்குடியின இருளர் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்து கொண்டு வீடுகளுக்குக் கொடுக்கப்பட்ட மின் இணைப்பை சுவிட்சு போட்டு மின் விளக்குகளை எரிய வைத்துத் தொடங்கி வைத்தார்.
Featured in The Hindu Tamil - Click here